Header Ads

  • BREAKING



    150 ஆண்டு பழைமையான கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம்.

    150 ஆண்டுகள் பழைமையான கிறிஸ்தவ விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு மசோதா கொண்டு வர இருக்கிறது.
    1869-ஆம் ஆண்டு விவாகரத்து சட்டத்தில், மத்திய அரசு கடந்த 2001-ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வந்தது. அதாவது, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியினர் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து பெற வேண்டுமெனில், அதுதொடர்பான வழக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிக காலம் இருவரும் பிரிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆனால், ஹிந்து திருமணச் சட்டம், பார்சி மதம் மற்றும் விவாகரத்து சட்டம், சிறப்பு திருமண சட்டத்தில் இந்த கால அவகாசம் ஓராண்டாக உள்ளது.
    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், ஏ.எம். சாப்ரே ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் இதுதொடர்பான வழக்கு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிற மதத்தினருக்கு விவாகரத்து அளிப்பதற்கான கால அவகாசம் ஓராண்டாக இருக்கும்போது, கிறிஸ்தவ மதத்தினருக்கு மட்டும் 2 ஆண்டுகளாக இருப்பது குறித்து கேள்வியெழுப்பினர். மேலும், அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    இதேபோல், சில மாநில உயர் நீதிமன்றங்களும் 2001-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
    இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தம்பதியினர் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் விவாகரத்து பெறுவதற்கு அளிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைக்கும் வகையில், அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக 2016-ஆம் ஆண்டு விவாகரத்து (திருத்தம்) மசோதாவை நாடாளுமன்ற அலுவல் பட்டியலில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இந்த மசோதா, வரும் 16-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
    அதேபோல், 1869-ஆம் ஆண்டு விவாகரத்து சட்டத்தில் கிறிஸ்தவ மத தம்பதியினரில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் இந்தியாவில் வசித்தாலும் விவாகரத்து கோரி வழக்குத் தொடுக்கும் வகையிலும் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    தற்போதைய சட்டத்தின்படி கணவன், மனைவி இருவரும் இந்தியாவில் வசித்தால் மட்டுமே விவாகரத்து கோரி வழக்குத் தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad