கொடநாடு கொள்ளை வழக்கை விசாரிக்கக் கூடாது- கேரள போலீஸாருக்கு தமிழக போலீஸ் நெருக்கடி?.
கோவையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சயானிடம், கொடநாடு வழக்கு குறித்து விசாரிக்கக்கூடாது என, தமிழக போலீஸார் கேரள போலீஸாருக்கு நெருக்கடி கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடநாடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான், சனிக்கிழமை அதிகாலை கேரளாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி மனைவி மகளை பறிகொடுத்தார். சயானின், மனைவி மற்றும் மகள் ஆகியோர் விபத்தில் சிக்குவதற்கு 3 மணி நேரம் முன்பே இறந்துவிட்டதாகவும், அவர்களது கழுத்தில் கத்திக் குத்து காயம் காணப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இது குறித்து, சயானிடம் கேரள போலீஸார் விசாரிப்பதற்கு முன்பாகவே அவரை தமிழக போலீஸார் கோவை அழைத்து வந்து, அரசு மருத்துவமனைக்கு பதில், குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனவே, விபத்து குறித்து சயானிடம் விசாரணை நடத்த, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கேரள போலீஸார் கோவை வந்தனர். ஆனால், சயானின் உடல்நிலையை காரணம் காட்டி கேரள போலீஸாருக்கு மருத்துவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். அனுமதி மறுக்கப்பட்டதன் பின்னணியில் தமிழக போலீஸார் இருப்பதாக கேரள போலீஸார் புலம்பிச் சென்றனர். இந்நிலையில், இன்று சயானிடம் விசாரணை மேற்கொள்வதற்காக வந்த கேரள போலீஸாருக்கு, கோடநாடு கொள்ளை வழக்கு குறித்து விசாரிக்ககூடாது எனவும், விபத்து குறித்து மட்டுமே விசாரிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தமிழக போலீஸார் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கேரள போலீஸார் சயானிடம் விசாரணை மேற்கொண்டபோது, கடந்த 28-ம் தேதி பழனி சென்று முருகனை தரிசித்துவிட்டு சரியான தூக்கமின்றி வாகனத்தை ஓட்டியதாகவும், இரவு 7 மணிக்கு பொள்ளாச்சி வந்து உணவருந்திவிட்டு அதிகாலையில் திருச்சூர் நோக்கி செல்லும்போது தூக்கக் கலக்கத்தால் விபத்து நிகழ்ந்ததாகவும், சயான் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அரை மணி நேரத்தில் விசாரணையை முடித்துகொண்ட கேரள போலீசார், மருத்துவமனையின் புறவாசல் வழியாக புறப்பட்டுச் சென்றனர்.








கருத்துகள் இல்லை