சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலா தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல்.
பொதுவாழ்வில் இல்லாத தம்மை சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிப்பதற்கு எந்தவித நியாயமும் இல்லை என்று வாதத்துடன், சசிகலா சார்பில் சீராய்வு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அவருடைய வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனை ரத்து செய்யக்கோரி மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவருக்கு மட்டும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தம்மையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு சசிகலா கோரியுள்ளார். தாம் வழக்கு காலத்தில் அரசுப் பதவிகளில் இல்லை என்பதால் ஊழலில் தமக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்று சசிகலா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுவாழ்வில் இருந்தவர் ஜெயலலிதா தான் என்றும் அவர் இப்போது உயிருடன் இல்லாததால் அவரை விடுவித்தது போல் தம்மையும் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் சசிகலா கோரியுள்ளர்.இதே போல தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்காமல் நிராகரிக்கும் என்றும் சட்ட வல்லுனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








கருத்துகள் இல்லை