காவிரி வழக்குகளை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைப்பு..உச்சநீதிமன்றம் அறிவிப்பு
உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இரு நீதிபதிகள் அமர்வு முன் காவிரி வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடுவதற்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இவ்வழக்கு மாறுகிறது.
இந்த அமர்வு மத்திய அரசின் மனு, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு தரப்பில் கடந்த 2007–ல் தாக்கல் செய்த மனு மற்றும் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் சார்பில் விளக்கம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 18ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.







கருத்துகள் இல்லை