Header Ads

  • BREAKING



    ரூபாயை மாற்றித் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் கொள்ளை: மூவர் கைது.

    சென்னையில் பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாயை மாற்றித் தருவதாகக் கூறி கட்டுமான நிறுவன மேலாளரைத் தாக்கி ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
    மேடவாக்கம் டேங்க் சாலையில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருபவர் செந்தில்குமார். இவர் கடந்த 14-ஆம் தேதி தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்குவதற்காக தன்னிடம் இருந்த ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற முடிவு செய்தார்.
    இதையடுத்து, செந்தில்குமார், தனது நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் கோபாலகிருஷ்ணனிடம் ரூபாய் நோட்டு மாற்றுவது குறித்து பேசினாராம். அப்போது கோபாலகிருஷ்ணன், தனது நண்பர் ஹரிகிருஷ்ணன் (22) பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கமிஷன் அடிப்படையில் மாற்றித் தருவதாக தெரிவித்துள்ளார்.

    இதற்கு செந்தில்குமார் சம்மதித்துள்ளார். இதையடுத்து, ஊதியப் பணம் ரூ. 10 லட்சத்தை
    கோபாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். அவரும் அதை எடுத்துக் கொண்டு வில்லிவாக்கம் அருகே ஒரு திரையரங்கு அருகே சென்றார்.
    அப்போது அங்கு ஹரிகிருஷ்ணன், அவர் நண்பர்கள் கொடுங்கையூர் முத்தமிழ்நகரைச் சேர்ந்த பரத் (23), எருக்கஞ்சேரியைச் சேர்ந்த டேவிட் (22) ஆகியோருடன் காரில் வந்தார். அங்கு காருக்குள் கோபாலகிருஷ்ணனை ஏற்றியுள்ளனர். அவர் காருக்குள் ஏறியதும் ஹரியும், அவர் நண்பர்களும் கோபாலகிருஷ்ணனை தாக்கினராம்.
    மேலும் அவர் வைத்திருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக் கொண்டு, காரில் கடத்தி பெரம்பூர் பின்னி மில் அருகே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டனராம்.
    இந்தச் சம்பவம் குறித்து கோபாலகிருஷ்ணன் உடனே செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். செந்தில்குமார், தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், தனது மேலாளர் தாக்கி காரில் கடத்தப்பட்டு ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் தேடி வந்தனர்.
    இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஹரிகிருஷ்ணன்,பரத்,டேவிட் ஆகிய 3 பேரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.9 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad