ஐகோர்ட் வக்கீல்கள் சங்க தேர்தல் : தலைவர் பதவிக்கு கடும் போட்டி
சென்னை: உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தேர்தல் நவம்பர் 23ம் தேதி நடக்கிறது. இதுவரை இந்த சங்கத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்து ஓட்டு போடும் உரிமை பெற்றிருந்தனர். உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் ஏராளமான வக்கீல்கள், மெட்ராஸ் பார் அசோசியேஷன், பெண் வக்கீல்கள் சங்கம், லா அசோசியேஷன், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம், எழும்பூர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம், சைதாப்பேட்டை நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாகவும் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் உரிமை பெற்றிருந்தனர்.
இதற்கிடையே, சங்கத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் "ஒரு சங்கம் ஒரு ஓட்டு" என்ற முறையை அறிவித்து உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், வக்கீல்கள் தாங்கள் விரும்பும் ஏதாவது ஒரு சங்கத்தின் தேர்தலில் மட்டுமே வாக்களிக்க முடியும். இதனால், உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 3,500ஐ கூட எட்ட முடியாத அளவுக்கு குறைந்தது. அதனால், தனிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.
இருந்தபோதிலும், இந்த முறை தலைவர், துணைத் தலைவர், செயலாளர் பதவிகளுக்கு கடும் போட்டி உருவாகியுள்ளது. ஏற்கனவே, தலைவராக இருந்த ஆர்.சி.பால்கனகராஜ் இந்த முறை தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டார். அதனால், தலைவர் பதவியை பிடிக்க 5 பேர் போட்டியில் இறங்கியுள்ளனர். துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.







கருத்துகள் இல்லை