500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை இல்லை : உச்சநீதிமன்றம்.
புதுடெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தடை கோரி சங்கம்லால் பாண்டே, விவேக் நாராயண் ஆகியோர் பொதுநல மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கருப்புப்பணம் பதுக்கியவர்களுக்கு மாறாக சாதாரண மக்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்கள் என்றும், அரசின் நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மத்திய அரசு செயல்பட வேண்டும் என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
மனுதாரர் கூறும் யோசனையை மத்திய அரசு பரிசீலிக்க தலைமை நீதிபதி அறுவுறுத்தியுள்ளார். வங்கிகளில் மக்கள் வரிசையில் காத்திருப்பது வேதனை தருவதாக உள்ளது என்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தெரிவித்துள்ளார். மக்களின் இன்னல்களை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.







கருத்துகள் இல்லை