சென்னையில் லஞ்ச புகாரில் சிக்கிய 2 மத்திய அரசு அதிகாரிகள்.
பயிர் தரச்சான்று கொடுக்க 7 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் சென்னை மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மண்டல பயிர் பாதுகாப்பு மையத்தின் இணை இயக்குனர்கள் இருவர் சிக்கியுள்ளனர். மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த பயிர் பாதுகாப்பு மையத்தின் இணை இயக்குனர்கள் மாணிக்கம், சத்தியநாராயணன் ஆகிய இருவரும் லஞ்சம் பெற்றதாக கிடைத்த தகவலை அடுத்து தூத்துகுடியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த இருவரையும் மடக்கி சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவர்களது உடமைகளை சோதனை செய்த போது 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணம் இருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சில ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்களுக்கு பயிர் தரச்சான்று கொடுப்பதற்கு லஞ்சம் பெற்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மீனம்பாக்கத்தில் உள்ள மண்டல பயிர் பாதுகாப்பு மைய அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.இந்த முறைகேட்டில் இந்த துறையை மேலும் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதையடுத்து மதுரை, தூத்துக்குடி, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.








கருத்துகள் இல்லை