போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சு ஒத்திவைப்பு.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு, ஓய்வுதிய நிலுவை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர, இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு, தொழிற்சங்க பிரதிநிதிகள் வருகை தந்தனர். ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் தரப்பில் இருந்து அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இதையடுத்து, இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்த தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் யாசின் பேகம், முத்தரப்பு பேச்சுவார்த்தை மற்றொரு நாளில் நடைபெறும் என்று தெரிவித்தார்.








கருத்துகள் இல்லை