அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்தால் வேலூர், கரூர் உள்பட 9 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது வெப்பம்.
அக்னி நட்சத்திரம் தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் வெயில் 9 இடங்களில் சதம் அடித்தது. கரூர், திருச்சி,வேலூர் போன்ற இடங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் அவதிப்பட்டனர்.கோடைக்காலத்தின் உச்சகட்டம் என கருதப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று முதல் மக்களை வாட்டி வதைக்கிறது. வரும் 28ம் தேதி வரை இது நீடிக்கும் என்றும் வெயிலின் தாக்கம் அதிகபட்சமாக 107 டிகிரி வரை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், திருத்தணி, சேலம், தர்மபுரி, கரூர் உள்ளிட்ட இடங்களில் அனல் காற்று வீசியது. கரூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி வெப்பம் பதிவானது. இரவிலும் வெப்பத்தின் தாக்கம் குறையாததால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். பலர் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். சென்னையிலும் வெயில் அதிக அளவில் இருந்தது.மாலையில் கடற்கரையை நோக்கி மக்கள் அணி அணியாக வரத்தொடங்கினர்.கோடை மழை வந்தால் வெப்பம் தணியும் என்று கருதப்படும் நிலையில், தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை