வரும் காலங்களில், மத்திய அரசால், மாநிலங்களுக்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது - மத்திய நிதித்துறை அமைச்சகம்.
புதுடெல்லி: வரும் காலங்களில், மத்திய அரசால், மாநிலங்களுக்கு, ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க முடியாது என்று நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மத்திய நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் & ஊரடங்கு காரணமாக, வரிவசூலில் நிலவும் தேக்கத்தால், இந்த நெருக்கடி உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.
நிதித்துறை செயலாளர் அஜய் பூஷன், நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இத்தகவலை கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
‘புத்தாக்க சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் இந்தியாவின் வளர்ச்சி நிறுவனங்களுக்கு நிதியளித்தல்’ என்பது தொடர்பாக விவாதிப்பதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து விவாதிப்பதற்கு வற்புறுத்தப்பட்டது.
இந்நிலையில், இது மாநில அரசுகளை எந்தளவிற்கு பாதிக்கும் என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. ஏனெனில், மாநிலங்களின் வரி வருவாயைப் பறித்துக்கொள்ளும் மத்திய அரசு, அவற்றுக்குரிய நிதியை தருவதில் தேவையற்ற காலதாமதம் செய்கிறது.
இதுதொடர்பாக, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள், ஏற்கனவே மத்திய அரசை கேள்விக் கேட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளை மாநிலங்கள் மேற்கொண்டுவரும் நிலையில், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் தாமதங்கள் மாநிலங்களின் நெருக்கடியை மேலும் அதிகரிக்கின்றன.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் மோடி அரசு கை வைத்ததால், உள்ளூர் அளவில் நடைபெறக்கூடிய பல மேம்பாட்டு பணிகள் முடங்கியுள்ளன.
மேலும், மத்தியில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையானது, நடைமுறை சாத்தியங்கள் சார்ந்ததாக இல்லாமல், யூக வருவாயின் அடிப்படையிலேயே சமர்ப்பிக்கப்படுவதாக காங்கிரஸ் உறுப்பினர் மனீஷ் திவாரி குற்றம் சாட்டுவதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.







கருத்துகள் இல்லை