நயன்தாரா பிறந்தநாளன்று புதிய அறிவிப்பு!
வழக்கமாக நடிகர்களின் பிறந்தநாளன்று தான் படங்களின் தலைப்பு, டீசர், டிரெய்லர், பாடல்கள் போன்ற படம் தொடர்புடைய விளம்பர அம்சங்கள் வெளியிடப்படும். ஆனால் தற்போது இந்தக் கெளரவம் நயன்தாராவுக்குக் கிடைக்கவுள்ளது.
வருகிற வெள்ளியன்று நயன்தாராவின் பிறந்தநாள். இதனையொட்டி வியாழன் நள்ளிரவில் அவர் நடித்துள்ள படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்படவுள்ளன.
மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. மீஞ்சுர் கோபி இயக்கும் கதாநாயகியை மையக்கதாபாத்திரமாகக் கொண்டுள்ள இப்படத்தின் விளம்பரங்கள் தான் நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்படவுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டப் பின்னணியை களமாக கொண்ட இப்படத்துக்காக, அவ்வப்போது அங்கேயே தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வந்தார் நயன்தாரா. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி கிருஷ்ணா படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். "காக்கா முட்டை' சகோதரர்கள் விக்னேஷ் - ரமேஷ், வேல ராமமூர்த்தி, இ. ராமதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்கிறார்கள். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார்.
டிமாண்டி காலனி படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர், அஜய் ஞானமுத்து. இவருடைய அடுத்தப் படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்துக்கு இமைக்கா நொடிகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுதவிர, சற்குணம் உதவி இயக்குநர் தாஸ் இயக்கும் டோரா, மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் என முக்கியமான படங்களில் நயன்தாரா நடித்துவருகிறார்.







கருத்துகள் இல்லை