Header Ads

  • BREAKING



    நிக்கி ஹேலிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி?

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்குப் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
    இது தொடர்பாக பல்வேறு அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருப்பதாவது:
    குடியரசுக் கட்சியின் இளம் நட்சத்திரமாக உள்ள நிக்கி ஹேலி (44) தற்போது தெற்கு கரோலினா மாகாண ஆளுநராக உள்ளார். அந்தக் கட்சியின் பிரபலமான இளம் தலைமுறைத் தலைவர்களில் ஒருவரான அவர், மிகவும் திறமைசாலி என்று பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருபவர். தேசிய அளவில் செயல்பட வேண்டியவர்கள் என்ற பட்டியலில் இடம் பெற்றவர்.
    குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வின்போது, துணை அதிபர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
    எனினும், மாகாண ஆளுநர் பொறுப்பிலேயே தொடர விரும்புவதாக அப்போது அவர் தெரிவித்தார்.
    இந்த நிலையில், குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, புதிய அமைச்சரவை அமைப்பது தொடர்பான ஆலோசனைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அமைச்சரவைச் செயலர் என்பதற்கு இணையான பொறுப்பை ரைன்ஸ் பிரீபஸ் ஏற்பார் என்று கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையைத் தீர்மானிப்பது, நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், துறைத் தலைவர்கள் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட முக்கியப் பொறுப்புகளுக்கு நியமனம் செய்யத் தகுந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்க, துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    அந்தக் குழு தற்போது பல்வேறு அமைச்சர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களைப் பரிசீலித்து வருகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு நிக்கி ஹேலி பெயர் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக அவரை டொனால்ட் டிரம்ப் நேரில் சந்தித்துப் பேசுவார் என்று கூறப்படுகிறது.
    வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு வேறு பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. நியூயார்க் மேயர் ரூடி ஜூலியானி பெயரும் அடிபடுகிறது. ஆயினும், இரண்டாம் தலைமுறை அமெரிக்கர், பெண், மாகாண ஆளுநர் பதவி வகிப்பவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் போன்ற காரணங்களால் நிக்கி ஹேலிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
    அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த நாட்டைப் பொருத்த வரையில், அதிபருக்கு அடுத்தபடியாக மிக சக்தி வாய்ந்த பதவி என்பது வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிதான்.
    எனவே ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகே நிக்கி பெயர் பரிசீலனைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப்புக்கு ஆலோசனை வழங்க, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸிஞ்சர் உதவியை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் பதவிக்கான நபர் குறித்து ஒரு சுற்றுப் பேச்சு ஏற்கெனவே நடந்து முடிந்ததாகக் கூறப்படுகிறது.
    குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளர் தேர்வின்போது, டொனால்ட் டிரம்ப்புக்கு நிக்கி ஹேலி ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மார்க்கோ ரூபியோவுக்கு அவர் ஆதரவு தெரிவித்தார்.
    ஆனால் இறுதியில் வேட்பாளர் தேர்வில் டிரம்ப் வெற்றி பெற்றதும், அவருக்கு முழு ஆதரவை நிக்கி ஹேலி தெரிவித்தார். இந்த நிலையில், திறமைசாலி என்ற அடிப்படையில், தற்போது வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்புக்கு நிக்கி ஹேலி பெயர் பரிசீலனையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
    பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவிக்கான நபரை முடிவு செய்வதும் பல சுற்று ஆலோசனைக்குப் பிறகே நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்தப் பதவிக்கு முன்னாள் அமெரிக்க ராணுவ தளபதி மைக்கேல் ஃபிளின் பெயர் அடிபடுகிறது. அதே சமயத்தில் அவருக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களில் அவர் கடந்த ஓராண்டு காலமாக டிம்ப்புக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
    ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு விவகாரங்களில் கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டவர் என்று பெயரெடுத்தவர் மைக்கேல் ஃபிளின். மத பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்து உதவி வழங்கி வரும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கி வரும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு உடையவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    பாதுகாப்புத் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய பதவிகளுக்கான நபர்களைத் தேர்ந்தெடுக்க முன்னாள் ராணுவ தளபதி ஜாக் கேன், முன்னாள் கடற்படை தளபதி மைக் ரோஜர்ஸ் ஆகியோர் ஆலோசனையை டிரம்ப் நாடியுள்ளார்.
    முக்கியப் பொறுப்புகளுக்கு நியமனம் செய்வது மட்டுமல்லாமல், கொள்கை அளவிலான கருத்துப் பரிமாற்றத்துக்காகவும் டிரம்ப் அவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். அதிபர் பதவியேற்பு வரும் ஜனவரி மாதம் நடைபெறுகிறது.
    உலக நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு
    அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ள மைக் பென்ஸ் ஆகிய இருவரும் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் அதிபர்கள், பிரதமர்களுடன் தொலைபேசி மூலம் பேசினர்.
    இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். கடந்த சில நாட்களில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் தெரசா மே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் உள்ளிட்டோருடன் டிரம்ப், பென்ஸ் பேசினர்.
    தேர்தல் வெற்றிக்குப் பிறகு அவரை நேரில் சந்திக்க இருக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் ஜப்பான் பிரதமர் ஷின்úஸா அபே. வெள்ளிக்கிழமை அவர்கள் சந்திக்க வாய்ப்புள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad