Header Ads

  • BREAKING



    ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை தமிழக அரசுக்கு 6 வாரம் கெடு.

    சென்னை : கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஊழல் அதிகாரிகள் மற்றும் துறை ரீதியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க 6 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி 2014ம் ஆண்டு தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி, தமிழகத்தில் கனிமவள கொள்ளை நடைபெறுவதைத் தடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக செயல்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிரானைட் கொள்ளையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 
    இந்த மனுவை தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் விசாரித்து, மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக மட்டும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, விசாரணையை சகாயம் முடித்து கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கிரானைட் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து, முறைகேட்டுக்கு உதவிய மத்திய, மாநில அரசு அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதிகாரி சகாயம் அளித்த அறிக்கையின் மீது தமிழக அரசு விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. 
    இந்நிலையில், இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் முத்துக்குமாரசாமி ஆஜராகி, சகாயம் குழு பரிந்துரை மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மேலும் 6 வார கால அவகாசம் வேண்டும் என கோரினார். கிரானைட் உரிமையாளர்கள் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, சகாயம் குழு அறிக்கையில் உண்மைக்கு மாறான தகவல் கூறப்பட்டுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் கிரானைட் குவாரிகள் மூலம் 52 ஆயிரம் கோடி அளவு மட்டுமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. ஆனால், சகாயம் அறிக்கையில் 1 லட்சத்து 16 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் மத்திய அரசையும் பிரதிவாதியாக இணைக்க வேண்டும் என்று கூறினார்.
    அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் சகாயம் குழு அறிக்கை தொடர்பாக மத்திய அரசின் 6 துறைகளிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார். இதனையடுத்து நீதிபதிகள், சகாயம் குழு பரிந்துரையின் மேல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மேலும் 6 வார கால அவகாசம் வழங்கி விசாரணையை ஜனவரி 11ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad