Header Ads

  • BREAKING



    ஆடம்பர வீடுகளின் விலை சரிவு அடையும்; ரியல் எஸ்டேட் துறையின் கறைகள் போகும்.

    புதுடில்லி : மத்திய அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க எடுத்த நடவடிக்கையால், ஆடம்பர வீடுகள் விலை சரிவடையும்; ரியல் எஸ்டேட் துறையில், வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்' என, ஜே.எல்.எல்., இந்தியா ரெசிடன்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, அஷ்விந்தர் ராஜ் சிங் தெரிவித்து உள்ளார்.அவர், மேலும் கூறியதாவது:மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்திருப்பது, ரியல் எஸ்டேட் துறையை கடுமையாக பாதிக்கும். இத்துறையில் தான், அதிகளவில் கறுப்புப் பணமும், ரொக்க பரிவர்த்தனைகளும் நடைபெறுகின்றன. குறிப்பாக, மிக அதிகமாக கறுப்புப் பணம் புழங்கக் கூடிய, ஆடம்பரமான, அதிக விலையுள்ள பழைய வீடுகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும்.
    இவ்வகை விற்பனையில், வங்கிகள், நிதி நிறுவனங்கள் வழியிலான பணப் பரிவர்த்தனைகள் குறைவாகவும், ரொக்க பரிமாற்றம் மிக அதிகமாகவும் நடைபெறுகிறது. அரசு நடவடிக்கையால், ஆடம்பர வீடுகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை, 25 - 30 சதவீதம் குறையும். இது, ஆடம்பர வீடுகளை வாங்குவோருக்கு சாதகமான அம்சமாகும். ரியல் எஸ்டேட் சந்தையில், திடீரென கறுப்புப் பணப்புழக்கம் காணாமல் போனதால், கணக்கில் காட்டாத பணத்தை, பல்வேறு குடியிருப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளோர் கலக்கமடைந்து உள்ளனர்.
    அவர்கள், வந்தவரை லாபம் என்ற நோக்கில், குடியிருப்புகளை விற்பனை செய்து, பணம் பெற முயற்சிப்பர். இதனால், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய விலை வீழ்ச்சி ஏற்படும். அதே சமயம், நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில், புதிய குடியிருப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ள, பாரம்பரியமான நிறுவனங்களுக்கு பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும். இவற்றின் குடியிருப்புகளை வாங்குவோரில், பெரும்பாலானோர், வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் கடன் வசதியில் வாங்குவோராக உள்ளது தான் இதற்கு காரணம்.
    மத்திய அரசு, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மேம்பாட்டு சட்டம், பினாமி பரிவர்த்தனை சட்டம் ஆகியவற்றுடன், கரன்சி செல்லாது என, அறிவித்துள்ள திட்டம், ரியல் எஸ்டேட் துறையில் படிந்துள்ள கறுப்புப் பணப்புழக்க கறையை போக்கும். அத்துறையில், வெளிப்படையான செயல்பாடுகளை மேற்கொண்டு, வளர்ச்சி காண வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad