டி.எஸ்.பி விஷ்ணு பிரியா மர்ம மரண வழக்கு சிபிஐ க்கு மாற்றம். உயரதிகாரிகள் திகில்.
சென்னை: டிஎஸ்பி விஷ்ணுப் பிரியா தற்கொலை சம்பவத்தில் சிபிஐ திடீரென்று வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனால் உயர் அதிகாரிகள் சிக்குவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 ஜூலை மாதம் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். விசாரணையின் அடிப்படையில் அவர் சிலரைக் கைது செய்ததுடன், தொடர்ந்து உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்வது குறித்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி திடீரென டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் அவருக்கு அளிக்கப்பட்ட நெருக்கடிதான் காரணம் என்று கூறப்பட்டது. முதலில் தற்கொலை என்று கருதப்பட்ட இந்த வழக்கு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளுக்குப் பிறகு கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கோகுல்ராஜ் கொலை மற்றும் விஷ்ணுபிரியா தற்கொலை இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், விஷ்ணுபிரியா விவகாரத்தை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மை வெளிவராது. அதனால் சிபிஐ விசாரிக்க வேண்டும் என விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விஷ்ணுபிரியா கொலை வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், மூன்று மாதத்திற்குள் வழக்கினை முடித்து வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் சிபிஐ விசாரிப்பதற்கான உரிய காரணம் ஒன்றும் தெரிவிக்கப்படவில்லை. சிபிசிஐடி விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதால் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, விஷ்ணுபிரியா வழக்கில் சிபிஐ வேகம் காட்டியது. ஆனால் சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களையும் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்த மூத்த வக்கீல் பி.வில்சன், தமிழக உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சிபிசிஐடி ஏடிஜிபி கரன்சின்கா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் விஷ்ணுப் பிரியா தற்கொலை குறித்த வழக்கு ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை வைத்து ஆய்வு நடத்திய சிபிஐ அதிகாரிகள், விஷ்ணுப் பிரியா தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் குற்றவாளிகள் குறித்த தகவல்களை ரகசியமாக வைத்துள்ளனர். ஓரிரு நாளில் வழக்கு விசாரணையை தொடங்க உள்ளனர். இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







கருத்துகள் இல்லை