சட்டம் & ஒழுங்கு, குற்றச் சம்பவங்களை களைய காவல் துறை புதிய முயற்சி.
சென்னையில் அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த பகுதி பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்க வாட்ஸ் அப் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகமானதன் விளைவு ஓரிடத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களோ, விபத்தோ காவல் துறைக்கு தகவல் தெரிவதற்கு முன்பு வாட்ஸ் அப், பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தீ வேகத்தில் பரவி விடுகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல் காவல் துறையும் பின் தொடர்ந்தால் தான் குற்றச் சம்பவங்களை தவிர்க்கவும், குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிக்கவும் முடியும் என்ப்தனால் சென்னை பெருநகர காவல் துறை ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சென்னை காவல் துறையின் கீழ் வரும் 135 காவல் நிலையங்களிலும் ஆய்வாளர் தலைமையில் பொதுமக்கள், என்.ஜி ஓக்கள் , குடியிருப்போர் நலச்சங்கங்கள் , அரசு அதிகாரிகள் , தன்னார்வலர்கள் மற்றும் அந்த பகுதியில் இருக்கும் வங்கி நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும் உறுப்பினர்களாக இயங்கும் வாட்ஸ் குழு துவங்கப்படுகிறது. இந்த குழுவில் குற்றப்பிரிவு ஆய்வாளர் , உதவி ஆய்வாளர்கள் , போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் ரோந்து போலீசார் இருப்பார்கள் எனவும் இந்த வாட்ஸ் அப் குழுவை அந்தந்த பகுதி உதவி கமிஷனரும் , துணை ஆணையரும் நேரடியாக கண்காணிப்பர்கள் எனவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது. இந்த குழுவில் சட்டம் ஒழுங்கு காவல்துறை சம்பந்தப்பட்ட தகவல்கள் , பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச்சம்பவங்கள் குறித்த தகவல்களை போலீசாருக்கு அளிக்க ஊக்குவிக்கும் விதத்தில் இந்த குழு வாட்ஸ் அப் குழு அமைக்கப்படுகிறது.
இதன் மூலம் காவல் துறை பணியை வேகப்படுத்தவும் , புகார்களை உடனடியாக பெற்று நடவடிக்கை எடுக்கவும் முடியும். இணை ஆணையர்கள் , கூடுதல் ஆணையர்கள் இவ்வாறு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து வாரந்தோறும் திங்கட்கிழமை காலை காவல் ஆணையர் கரன் சின்ஹா அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
புகாரளிக்க பொதுமக்களுக்கு ஏற்படும் காலதாமதம், உடலுழைப்பை குறைக்க உடனடி நடவடிக்கைக்கு இது உதவும் என்பதால் இந்த திட்டத்துக்கு வரவேற்பு இருக்கும் என தெரிகிறது.








கருத்துகள் இல்லை