நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு மரண தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு, டிசம்பர் 16ஆம் தேதி, தமது ஆண் நண்பருடன் இரவில் பேருந்தில் ஏறிய மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு, பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், அதே ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி போலீசார், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக் ஷய் தாகூர், ராம் சிங் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராம்சிங், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனிடையே, நிர்பயா வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம், 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுடன், இளம் குற்றவாளி ஒருவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப உத்தரவிட்டனர். அவன் 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். இதனிடையே, 4 பேரும் மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கடந்த 2014ம் ஆண்டு, அவர்களின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. ஏற்கெனவே, வழக்கு விசாரணை முடிந்துவிட்ட நிலையில், 4 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இன்று உறுதி செய்து, நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.








கருத்துகள் இல்லை