Header Ads

  • BREAKING



    அண்ணா ! - தமிழ்ப் பண்பாட்டுக்குப் புத்துயிரளித்தவர் - தொ. பரமசிவன்.

    நான் அவரை நேரில் பார்ப்பதற்குப் பல ஆண்டுகள் முன்னரே எழுத்து வழியாக என் வாழ்க்கைக்குள் வந்து விட்டார். எங்களுடைய அரசியலுணர்வு மிகுந்திருந்த காலகட்டம். நான் 10 வயதிலேயே 'திராவிடநாடு', 'முரசொலி' வாசிக்க ஆரம்பித்து விட்டேன். பெரும்பாலான பையன்களுக்குப் பாடப்புத்தகங்களைத் தாண்டி இப்படியான வாசிப்பு இருக்கும். 1962 தேர்தலில் அண்ணா தோற்றபோது நானும் என்னுடை வகுப்பு நண்பர்களும் பள்ளி மைதானத்தில் நின்று அழுதது நியாபகம் வருகிறது. அப்போது எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம். அப்படியென்றால் பாருங்கள். கல்லூரியில் நான் படிக்கும்போது வகுப்பிலுள்ள 63 மாணவர்களில் 60 பேருக்கு ஏதேனும் ஒரு கட்சி சார்பு இருந்தது. தனது வீடு தெரு,சாதி தாண்டி மாணவனுக்கென ஒரு பொது உலகம் இருந்தது. அவர்கள் பேசவும், சண்டைபோடவும் ஏதேனும் ஒரு தத்துவம் இருந்தது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டியும் அண்ணா எல்லோர் மத்தியிலும் செல்வாக்கோடு இருந்தார். தமிழால் தமிழ் அரசியலால் அவர் எல்லோரையும் இணைத்தார்.

    தமிழ் தான் இங்கே திராவிட அரசியலுக்கான உயிர். திராவிடம் என்று எதைச் சொல்லுகிறோம்? இரு விளக்கங்கள் கொடுக்கலாம். இனம் சார்ந்து ஆரியர், திராவிடர் என்று இங்குள்ள இரு இனங்களில், எல்லா இடங்களையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர முற்படும் ஆரிய பண்பாட்டிற்கு மாற்றாக, பன்மைத்துவத்தைப் பேசும்போது திராவிடம் பேசுகிறோம். அடுத்து இனம் சார்ந்து தென்னகத்தை- கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளா தமிழ்நாடு-இணைந்த பகுதியைக் குறிப்பிடும்போது திராவிடம் பேசுகிறோம்.

    ஆரியம் திராவிடம் வரலாற்று வேறுபாடுகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. பண்பாட்டுத் தளத்திலும் இந்த வேறுபாடுகள் பல விஷயங்களில் இன்றளவும் நீடிக்கின்றன. தென் மாநிலங்களிலும் திராவிட மொழி பேசுபவர்களுக்கென்று தனித்த பண்பாடு இருக்கிறது. பிராமணர் அல்லாத எல்லா சாதிகள் மத்தியிலும் பொதுவான அம்சங்கள் நிறையவும், ஒவ்வொரு சாதிக்குமான சின்னச் சின்ன பண்பாட்டு அசைவுகள் இருப்பதையும் பார்க்கிறேன்.

    ஓர் உதாரணத்திற்கு, இந்தச் சமூகங்களில் தாய்மாமனுக்குள்ள மரியாதையைச் சொல்லலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சப்பாடாகத் தொடர்கிறது இது. ஆரியப் பண்பாட்டில் இது கிடையாது. மற்றொன்று இறந்தவருக்கு, சடலத்திற்குக் கொடுக்கும் மரியாதை. நிறைய சொல்லலாம். திராவிட அரசியல் என்பதன் அடிநாதம் அவரவருக்கு உரிய பிரதிநிதித்துவம், அதிகாரத்தை அவரவருக்குக் கொடு என்பது தான். இங்கே அரசியல் பண்பாடு எல்லாவற்றிலும் பிராமணியத்தின் ஆதிக்கம் இருப்பதால் பிராமணியத்திற்கு எதிரான இயக்கமாக அது உருவெடுத்தது. ஆனால் தொடக்கம் முதலாகவே பிராமணர்களை எதிரியாக்கவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் பிராமணர்களையும் இயக்கத்தினுள் கொண்டு வந்தார் அண்ணா. சமூக ரீதியாக பிராமணர்கள் மட்டும் அல்லாது, இங்கேயே வந்து தங்கிவிட்ட மாற்று மொழியினரையும் உள்ளடக்கும் விதமாகத் தமிழையும் தமிழுணர்வையும் இணைப்புச் சங்கிலியாக்கினார்.

    திராவிடநாடு என அவர் முன்வைத்த நாட்டினுடைய நிர்வாகமும் கூடத் தெளிவாக மலையாளிகளுக்கு, தெலுங்கர்களுக்கு, கன்னடர்களுக்கு, தமிழர்களுக்கு என்று அவரவருக்கான தனி நிலத்தையும் அங்கே அவரவர் சுய ஆட்சியையும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. ஒரு கூட்டரசாக இயங்கலாம் என அவர் நினைத்தார். ஆகையால் திராவிட அரசியலும் தமிழ் அரசியலும் வேறுவேறு அல்ல. தமிழ் அரசியலுக்குக் கூடுதல் தத்துவ பலத்தைத் தருவது என்று திராவிட அரசியலைச் சொல்லலாம்.

    இந்தியத் துணைக் கண்டத்தில் சாதிக்கும் பிராமணியத்திற்கு உள்ள செல்வாக்கை அவர் முழுமையாக உணர்ந்து இருந்தார். அதனால் தான் அரசியல் தளத்தில் பங்கெடுக்கும் ஒரு இயக்கத்தின் லட்சியத்தில் சாதி ஒழிப்பையும் முக்கியமான ஒன்றாக்கினார். சகலத்திலும் பிராமணியம் கலந்திருப்பதால்தான் ஒவ்வொரு தளத்திலும் அதற்கு மாற்றான ஒன்றை நிறுவ முற்பட்டார்.

    தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இருந்து சாதிப் பெயரை ஒழித்ததே அண்ணாவின் சாதனைகளில் ஒன்று தான். இஸ்ரோவின் தலைவராக இருந்த விஞ்ஞானியே மாதவன் நாயர் என்று சாதியைக் கூடச் சூட்டிக் கொள்ளும் நாடு இது. அரசியலில் சொல்ல வேண்டுமா? மேனன்கள், கவுடாக்கள், ராவ்கள், சர்மாக்கள், முகர்ஜிக்கள்... இந்தியாவில் எங்கே சாதி ஓட்டு இல்லாத அரசியல்வாதி இருக்கிறார் தமிழ்நாடு தவிர?

    எங்களுடைய நெல்லை மாவட்டம் சாதி உக்கிரத்தில் உழன்ற ஊர். அண்ணாவின் அரசியல் எப்படிச் சூழலை மாற்றியது என்பதற்கு நானெல்லாம் நேரடி சாட்சியம். 'சாதி கேட்பது கேவலம்' என்ற உணர்வை ஒரு தலைமுறைக் காலகட்டத்துக்குள் இங்கே அவர் கொண்டுவந்து விட்டார். பெரிய சாதனை இல்லையா இது? சங்க இலக்கிய மரபை அவர் மீட்டெடுத்தர். அதன் வழி புதிய மதிப்பீடுகளை உருவாக்கினார். தமிழ்நாட்டின் அரசியலுக்கு என்று தனிக் கலாச்சாரத்தை உருவாக்க முற்பட்டார். எல்லோரையும் உள்ளனைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது.

    பொங்கல் பண்டிகைக்குப் புது உருவம் கொடுக்க முற்பட்டாரே! ஒரு சமூகம் இளைப்பாறிக் கொள்கிற நிகழ்ச்சி திருவிழா. பண்டிகையும் அப்படித் தான்.இது அந்தந்தப் பகுதி மக்களோடும் உற்பத்தியோடும் மண்ணோடும் பிணைக்கப்பட்டிருக்கிறது. சமூக மாற்றம் என்பது அரசியல் தளத்தில் மட்டுமே நிகழ்வது கிடையாது என்பதும் பண்பாட்டுத் தளத்தில் வேர் பிடிக்காத மாற்றம் நிலைக்காது என்பதும் அண்ணாவுக்கு தெரிந்து இருந்தது. அதனுடைய விளைவாகவே தமிழர்த் திருநாளான பொங்கல் பண்டிகைக்குப் புத்துயிர் கொடுத்தார் அண்ணா. எல்லோரையும் 'தமிழர்கள்' என்ற அடையாளத்தின் கீழ் ஒன்று திரட்டும் இலக்கும் சமத்துவ இலட்சியமும் அதன் பின்னே இருந்தன. பிற்பாடு கருணாநிதி ஆட்சியின்போது தமிழ்ப் புத்தாண்டு என்று தை முதல் தேதியில் இருந்து கணக்கைத் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதும்கூட இதன் தொடர்ச்சி தான்.

    'இந்து-இந்தி-இந்துஸ்தான்' என்று ஒரே மதம், ஒரே மொழி, ஒரே நாடு என்கிற கொள்கையின் கீழ் இந்தியாவைக் கொண்டுவரும் பண்பாடுகள் அனைத்துக்கும் மாற்று வழிகளைச் சிந்தித்தவர் அண்ணா என்பதை நீங்கள் அண்ணாவைப் படிக்கும் போது விளங்கிக் கொள்ளலாம். அண்ணாவைப் பொறுத்த வரையில் இந்தியக் கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது. வேண்டுமானால் இந்தியக் கலாச்சாரங்கள் எனச் சொல்லலாம். ஏனெனில் கலாச்சாரங்களின் தொகுப்பே இந்தியா. இதற்கு வழிகாட்டும் நிலமாகவே தமிழ்நாட்டை அண்ணா கனவுகண்டார் அதற்கான பாதையாக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்த பேச்சு, எழுத்து, உரையாடல்கள், வாசிப்பு வெளியை வெகுமக்கள் நோக்கி நகர்த்தினார். கடவுள் எதிர்ப்பு திராவிட இயக்கத்திற்கு சுமைதானே எனக் கேட்கிறீர்கள். அப்படி கிடையாது. பெரியாரை, அண்ணாவை முழுமையாகப் படித்தவர்கள் எவரும் கடவுளர்களை அவர் தாக்கிப் பேசியதன் நோக்கம் சாதி ஒழிப்பு என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வார்கள்.

    பெரியார், அண்ணா இருவருமே "நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களைச் சமூகக் கேடுகளாக நினைத்தனர். "நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தை நான் வெறுக்கிறேன்" என்பதைப் பல இடங்களில் அண்ணா பேசியிருக்கிறார். பெரியார் கடவுள் மறுப்பைத் தூக்கிப் பிடித்தது வைதீக எதிர்ப்பு பிராமணிய எதிர்ப்புக்காகத் தானே தவிர ஆன்மீக எதிர்ப்பு என அதைப் பார்க்க முடியாது. பிள்ளையார் சிலையைத் தான் பெரியார் உடைத்தார். சுடலைமாடன் சிலையை அல்ல. பெருந்தெய்வ சிறு தெய்வ அரசியல் பிராமணியம் உள்ளவரை நீடிக்கும் நாட்டு தெய்வங்களை மக்களின் தெய்வங்களாகப் பார்க்கிறேன். இந்த ஆன்மிகம் மக்களுடைய ஆன்மிகம்.அதாவது இது நிறுவனமயமாக்கப்பட்டது கிடையாது.

    அதிகாரச் சார்பற்ற ஆன்மிகம். 

    இன்றைக்கும் கிராம தெய்வங்களுக்கான திருவிழாவில் மத எல்லைக்கு அப்பாற்பட்ட கூடுகை, பங்கேற்பைப் பார்க்க முடியும்.  கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே குறுக்கே யாரும் இல்லாமல் வழிபட முடியும். கிராம எல்லையில் நிற்கிற வீரனை நீங்கள் தொட்டுக் கும்பிடலாம். படையல் போடும்போது குடும்பப் பெரியவர் தான் பல இடங்களில் பூஜை செய்கிறார். இந்த ஜனநாயகம் நிறுவனமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டில் கிடையாது. அது நமக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு ஆளை நிறுத்துகிறது, சம்பிரதாயங்களை நிறுத்துகிறது. இதன் மூலம் கிடைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும் அதன் வழியாகக் கிடைக்கும் அரசியல் அதிகாரத்தையும் கொண்டே பிராமணியம் வாழ்கிறது.

    எபோது வரை மேல் கீழ் என்ற அடுக்குமுறை இருக்கிறதோ அப்போது வரை அதற்கு எதிரான கலகங்களும் நீடிக்கத் தான் செய்யும். நான் என்ன சாப்பிடுகிறேனோ அதை என் தெய்வமும் சாப்பிடுகிறது. நான் கறி சாப்பிட்டால் அதுவும் கறி சாப்பிடும். நான் மது குடித்தால் அதுவும் மது குடிக்கும். இதுவும்கூட ஒரு உயர்தர சமத்துவம் தானே? அப்படிப்பட்ட மக்களின் தெய்வத்தை எப்படி நீங்கள் அழிக்க முடியும்?.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad