150 பேரை ஏமாற்றிய கில்லாடி பெண் கைது.
பெங்களூரு: ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வழக்கறிஞர் என, கூறி, நாடு முழுவதும், 150க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, பணம், பொருட்களை பறித்த, ராஜஸ்தானை சேர்ந்த கில்லாடி பெண், பெங்களூரில் பிடிபட்டார்.இது குறித்து பெங்களூரு போலீசார் கூறியதாவது:பெங்களூருரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரிடம் வந்த ஒரு பெண், தான், ஐ.ஏ.எஸ்., படித்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றுவதாகவும் கூறியபடியே இனிக்க இனிக்க பேசியுள்ளார்.அந்த வழக்கறிஞரின் அலுவலகத்தில் வேலை வேண்டும் என்றும் கேட்டு, அந்த பெண் பேசியுள்ளார். தற்போதைக்கு வேலை எதுவும் இல்லை என, அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.இதற்கிடையில், பேச்சின் இடையே, மேஜையில் இருந்த அந்த வழக்கறிஞரின் மொபைல்போன் மற்றும் பர்சை திருடிய அந்த பெண் தப்பியுள்ளார்.
சுதாரித்த வழக்கறிஞர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்தப் பெண்ணை பிடித்தோம்.விசாரணையில், அந்த பெண்ணின் பெயர், குஷ்பு சர்மா, 28, ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மாற்றுத் திறனாளியான அவர், தன்னை, ஐ.ஏ.எஸ்., அதிகாரி மற்றும் வழக்கறிஞர் என, 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் பலருடன் நட்பு கொண்டுள்ளார்.பேஸ்புக் நட்பை பயன்படுத்தி, குறிப்பிட்ட சிலரை நேரில் சந்தித்து நட்பு வளர்த்து, பணம் மற்றும் பொருட்களை திருடியுள்ளார். பொய் வழக்கு தொடருவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார். இவ்வாறு, ராஜஸ்தான், டில்லி உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில், குஷ்பு சர்மா மீது, 150க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.டில்லியில் ஒரு பெரிய மனிதருடன் பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
காரில் அவருடன் சென்ற குஷ்பு, உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். அந்த நபரும் சம்மதித்தார். இதற்கிடையே, காரை நிறுத்தி, பொருள் வாங்குவதற்காக, அந்த நபர் கடைக்கு சென்ற போது, காரைத் திருடிக் கொண்டு இந்தப் பெண் தப்பி விட்டார்.இந்த மோசடிகள் குறித்து ராஜஸ்தானில் அதிக வழக்குகள் இருப்பதால், ராஜஸ்தான் போலீசாரிடம் அவரை ஒப்படைக்க உள்ளோம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.







கருத்துகள் இல்லை