ரூ.2.50 லட்சத்துக்கு மேல் வங்கியில் பணம் செலுத்தியவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்.
புதுடெல்லி: வங்கியில் கடந்த 8ம் தேதிக்குப்பின் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை செலுத்தியவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நோக்கத்தில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை செல்லாததாக மத்திய அரசு கடந்த 8ம் தேதி அறிவித்தது. மக்கள் வைத்திருக்கும் நோட்டுக்களை, டிசம்பர் 30ம் தேதிக்குள் வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது.
ஒருவர் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அதற்கான வருமானம் குறித்து வருமானவரித்துறை கணக்கு கேட்கும் என கூறப்பட்டிருந்தது. கணக்கில் காட்டப்படாத வருமானத்துக்கு வரி மற்றும் 200 சதவீத அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த 8ம் தேதிக்குப்பின் வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை டெபாசிட் செய்தவரின் விவரங்களை வருமான வரித்துறைக்கு வங்கிகள் தெரிவித்தன. அதன்படி நாடு முழுவதும் பல நகரங்களில் வருமான வரித்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வழக்கத்துக்கு மாறாக வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அந்த வருமானத்துக்கான ஆதாரத்தை தாக்கல் செய்யும்படி கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வருமான வரி செலுத்தியவர்களாக இருந்தால், கடந்த 2 ஆண்டுகளாக தாக்கல் செய்த வருமான வரி கணக்கை காட்ட வேண்டும் எனவும் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதேபோல் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், தங்கம் வெள்ளி வியாபாரிகள், ஹவாலா பணம் மாற்றுபவர்களின் பணபரிமாற்றங்களையும் வருமான வரித் துறை கணக்கெடுத்து வருகிறது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில், 5 கூட்டுறவு நிறுவனங்கள் ரூ.8 கோடி அளவுக்கு பணத்தை மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அறக்கட்டளை மற்றும் மத அமைப்புகள், கடந்த 8ம் தேதி நிலவரப்படி தங்களின் வங்கி கணக்குகளை தாக்கல் செய்யும்படி வருமான வரித்துறை சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடை என்ற பெயரில் கருப்பு பணம் மாற்றப்படுவதை தடுக்க வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.







கருத்துகள் இல்லை