குடிசை மக்கள் மூலம் பணத்தை மாற்றும் வட்டிக் கடைக்காரர்கள் ரூ. 4 ஆயிரத்துக்கு ரூ. 300 கமிஷன்.
வட்டிக் கடைக்காரர்கள் தங்களிடம் கொட்டிக் கிடக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற குடிசை பகுதி மக்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
ரூ. 4 ஆயிரம் மாற்றிக் கொடுத்தால் ரூ. 300 கமிஷன் கிடைப்பதால் ஆர்வத்துடன் குடிசைமக்கள் முன்வருவதும் தெரியவந்திருக்கிறது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, அந்தப் பணத்தை மாற்ற வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் கடந்த 10-ஆம் தேதி முதல் கூட்டம் அலைமோதி வருகிறது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், ரூ. 100, ரூ.50 நோட்டுகளை பெறுவதற்கும் மக்கள் வங்கிகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், கள்ளநோட்டுப் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையினால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு கூட சிரமப்பட்டு வருகின்றனர்.
அதே வேளையில், ஒரு நாளைக்கு ஒருவரிடமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு, அதன் மதிப்பில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகள் மட்டுமே வங்கியில் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இப்போது இது ரூ. 4,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஏடிஎம் மையங்களில் ரூ. 2,500 மட்டுமே ஒரு நாளைக்கு எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரூ.300 கமிஷன்: இதனால் ஒரு நாளைக்கு ரிசர்வ் வங்கி வழங்க உத்தரவிட்ட பணத்துக்குமேல், தேவைப்படுகிறவர்கள், வேறு நபர்கள் மூலம் வங்கியில் பணத்தை மாற்றி, அதற்கு கமிஷன் வழங்கத் தொடங்கியிருக்கின்றனர்.
குறிப்பாக சென்னையில் வட்டிக் கடைக்காரர்கள், அடகு கடைக்காரர்கள், தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பயன்படுத்த தொடங்கியிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள், குடிசையில் வசிக்கும் மக்களிடம் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அதற்கு புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால் ரூ.300 கமிஷன் கொடுக்கின்றனர். இதற்காக குடிசைப் பகுதிகளில் உள்ள பெரிய மனிதர்களை, இவர்கள் கைக்குள் வைத்துக் கொண்டு, தங்களது காரியத்தைச் சாதிப்பதாக போலீஸார் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு எழும்பூர், திருவல்லிக்கேணி, வேப்பேரி, பாரிமுனை, சௌகார்பேட்டை, சூளை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், திருவிக நகர்,புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை ஆகியப் பகுதிகளில் அதிகமாக நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களின் உரிமையை உறியும் இந்த வட்டிக்கடைக்காரர்கள்,வியாபாரிகள் மீது சம்பந்தப்பட்ட துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.







கருத்துகள் இல்லை