Header Ads

  • BREAKING



    ரூபாய் நோட்டு பிரச்னை: ரூ.500 கோடி ஜவுளி தேக்கம்.

    ஈரோடு : ரூபாய் நோட்டு பிரச்னை காரணமாக ஈரோடு ஜவுளிச்சந்தை மற்றும் ஜவுளி கிடங்குகளில் ரூ.500 கோடிக்கு ஜவுளி தேக்கம் அடைந்துள்ளது.
    ஈரோடு ஜவுளிச்சந்தை வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமன்றி பிற நாள்களிலும் கனி மார்க்கெட் ஜவுளிச்சந்தைக்கு வியாபாரிகள் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
    தமிழகம் மட்டுமன்றி கேரளம், தெலுங்கானா, ஆந்திரம், கர்நாடகம், ஒடிசா மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் வாரந்தோரும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
    இச்சந்தையில் சேலைகள், லுங்கிகள், துண்டுகள், போர்வைகள், சுடிதார்கள், குழந்தைகளுக்கான ஜட்டிகள், பனியன்கள், ரெடிமேடு ஆடைகள், மேஜை விரிப்புகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மிதியடிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 1,000 ரக ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
    மாநகராட்சி இடம் தவிர, தலைமை அஞ்சல் நிலையம் எதிரே உள்ள சென்ட்ரல் திரையரங்கு வளாகம், அசோகபுரம் ஆகிய இடங்களிலும் ஜவுளிசந்தை நடைபெறுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான கனிமார்க்கெட் வாரத்தின் பிற நாள்களிலும் இயங்கும். இங்கு வார நாள்களில் 500 கடைகளும், ஜவுளிச்சந்தையின்போது 900 கடைகளும் இயங்கும்.
    திருப்பூரில் உற்பத்தியாகும் 80 சதவீத பனியன், ஜட்டிகளும், ஈரோட்டில் உற்பத்தியாகும் லுங்கி, சட்டைகள், ரெடிமேடுகள், துண்டுகள் ஆகியவற்றில் 100 சதவீதமும், தமிழகத்தில் பிற பகுதிகளில் உற்பத்தியாகும் சுடிதார்களில் 70 சதவீதமும், போர்வைகளில் 70 சதவீதமும் ஈரோடு சந்தையின் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
    ஈரோடு ஜவுளிச்சநதையில் கொள்முதல் செய்வதற்காக தமிழக்ததின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமன்றி கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்தும் வாரந்தோறும் வியாபாரிகள் வந்துசெல்கின்றனர்.
    இந்நிலையில், ரூபாய் நோட்டு பிரச்னையால் ஈரோடு ஜவுளிச்சந்தை கடந்த ஒருவாரமாக முற்றிலும் முடங்கியுள்ளது.
    இது குறித்து கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தை வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.செல்வராஜ் கூறியதாவது:
    வெளிமாநிலங்கள், வெளியூர்களில் இருந்து வரும் ஜவுளி வியாபாரிகள் பெரும்பாலும் ரொக்கப் பணத்தை மட்டுமே வழங்க ஆர்வம் காட்டுகின்றனர். பல ஆண்டுகளுக்கும் மேலாக இதே வழக்கத்தை கொண்டுள்ளனர். திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்சந்தைக்கு வியாபாரிகள் வருவதை நிறுத்திவிட்டனர். இதனால் ஜவுளிச்சந்தையில் வர்த்தகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
    மேலும், இந்த அறிவிப்பால் ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்து வருகின்றன. ஜவுளிச்சந்தை மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஜவுளி நிறுவன கிடங்குகளில் சுமார் ரூ.500 கோடிக்கு ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad