Header Ads

  • BREAKING



    ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் பட்டியலில் உள்ள கொடைக்கானலில் கொடி அணிவகுப்பு.

    கொடைக்கானல் : ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் வட்டக்கானல் உள்ளிட்ட கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விரைவு அதிரடிப்படையின் கொடி அணிவகுப்பு நேற்று நடந்தது. தமிழகத்தில் வெளிநாட்டவர் அதிகம் குவியும் இடங்களுள், மலை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு முக்கிய இடம் உண்டு. இங்குள்ள வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினர் அதிகளவில் தங்குவார்கள். குறிப்பாக, நவம்பர் முதல் ஜனவரி வரையிலான காலங்களில் இங்கு அவர்கள் வருகை அதிகம் இருக்கும். இந்தப்பகுதியை தாக்குவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு மத்திய அரசின் புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    இந்தநிலையில், மத்திய அரசின் விரைவு அதிரடிப்படையினர் கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கொடி அணிவகுப்பு நடத்தினர். நவீனரக துப்பாக்கிகளுடன் அதிரடிப்படை வீரர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். வன்முறை, தீவிரவாதம், இனவாதம் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு விரைவான நடவடிக்கை எடுக்க விரைவு அதிரடிப்படை உறுதுணை புரியும் என்பதைச் சுட்டிக் காட்டும் விதமாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது. ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் கொடைக்கானல் பகுதியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த விரைவு அதிரடிப் படையின் அணிவகுப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் 40 பேர் கொண்ட குழுவினர் கொடைக்கானல் நகர் மற்றும் வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு, அணிவகுப்பு மேற்கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad