Header Ads

  • BREAKING



    மீன்பிடி உரிமை: இந்தியாவின் வேண்டுகோள் நிராகரிப்பு.

    மன்னார் வளைகுடாவிலும் பாக் நீரிணைப் பகுதியிலும் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்து விட்டது.
    இந்திய-இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தில்லியில் இரு நாட்டு வெளியுறவுத்துறை, வேளாண்துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா, இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரா, மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    இக்கூட்டத்தில் இரு நாட்டு சர்வதேச கடல் பகுதி அருகே மீன் பிடிப்பது, மீனவர்களின் வாழ்வாதாரம், இரு நாட்டு கடற்படையினரின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பான பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது, மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக கூட்டுப் பணிக் குழுவை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
    எனினும், மன்னார் வளைகுடாவிலும் பாக் நீரிணைப் பகுதியிலும் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதை படிப்படியாக நிறுத்துவதற்கு மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்குமாறு இந்தியா விடுத்த வேண்டுகோளை இலங்கை நிராகரித்து விட்டது என்று இலங்கையில் இருந்து வெளிவரும் "சன்டே டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது: அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்குமாறும், இலங்கைக் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் 80 நாள்களுக்கு மீன் பிடித்துக் கொள்ள அனுமதிக்குமாறும் இந்தியா விடுத்த வேண்டுகோளையும் இலங்கை நிராகரித்து விட்டது.
    "இந்திய அமைச்சர்களோடு விவாதிக்கையில் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலவில்லை' என்று இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீரா, தில்லியில் இருந்து தொலைபேசி மூலம் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது இருதரப்புக்கும் இடையிலான முட்டுக்கட்டையை நீக்க இலங்கைத் தரப்பு தவறி விட்டது என்று அப்பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.
    இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், "இலங்கை கடற்பகுதியில் சுமார் 1,000 இந்திய மீன்பிடிப் படகுகள் இயங்குகின்றன. இது மீன்வளத்தைப் பாதிக்கும் செயல்' என்று தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad