புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: ஓட்டுநர் பலி
கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒட்டுநர் உயிரிழந்தார்.
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வாராந்திர ஊதியம் வழங்குவதற்காக வங்கியில் இருந்து புதிய ரூபாய் நோட்டுகள் எடுக்கப்பட்டது.
பின்னர் அந்த பணத்தை ஒரு வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அங்குள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டது. தேயிலை தோட்டத்துக்கு, பணம் இருந்த வாகனத்தை ஓட்டுநர் ஓட்டிச்சென்றார். அவருடன் பாதுகாவலர், தோட்ட தொழிலாளி ஆகியோரும் சென்றனர்.
திடீரென வழியில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் ஒன்று பணம் கொண்டு சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில், ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அருகாமையில் உள்ள மக்கள் ஒடி வந்ததால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்ய அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.







கருத்துகள் இல்லை