Header Ads

  • BREAKING



    மாத சம்பளம் வாங்குவோர் பீதி: வருமான வரித்துறையின் எஸ்எம்எஸ் அதிரடியால் கிலி.

    புதுடெல்லி: வருமான வரித்துறை கடந்த வாரம் மாத சம்பளக்காரர்களுக்கு திடீரென அனுப்பிய எஸ்எம்எஸ் அவர்களது வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
    டீடிஎஸ்- மாத சம்பளக்காரர்களின் தலைவலி. வருமான வரி செலுத்த வேண்டிய அளவுக்கு அதாவது ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு அதிகமாக சம்பளம் வாங்குவோருக்கு அவர்களது நிறுவனத்தால் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப்படுவதுதான் டீடிஎஸ். ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் ஒவ்வொரு ஊழியரிடமும் இருந்து வரிச்சலுகை பெறுவதற்கான முதலீடு விவரங்களை நிறுவனங்கள் கேட்டுப் பெறும். அதன் அடிப்படையிலேயே மூலத்தில் வரி பிடித்தம்(டீடிஎஸ்) செய்யப்படும். 
    வருமான வரியை மாத சம்பளக்காரர்களையே செலுத்தச் சொன்னால் ஏமாற்றிவிடுவார்கள் என்று, வருமான வரித் துறை அறிமுகப்படுத்தியதுதான் இந்த டீடிஎஸ்.
    மாத சம்பளக்காரர்கள் தவிர வங்கி டெபாசிட்டுக்கான வட்டி, ராயல்டி, கமிஷன், புரோக்கரேஜ் உள்ளிட்ட பல வருமானத்திற்கும் டீடிஎஸ் உண்டு. மாத சம்பளக்காரர்கள் ஓராண்டில் செலுத்த வேண்டிய வருமான வரியை 12 தவணைகளாக பிரித்து வசூலிக்க வழிசெய்வதுதான் இந்த டீடிஎஸ். இப்படி பிடிக்கப்படும் டீடிஎஸ்சை சம்பந்தப்பட்ட நிறுவனமே ஊழியரின் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை(பான்) குறிப்பிட்டு வருமான வரித்துறையில் செலுத்திவிடும். 
    டீடிஎஸ் விவரம் பலருக்கு புரியாத புதிராகவே உள்ளது. நிதியாண்டு முடிந்ததும் நிறுவனம் தரும் பார்ம் 16ல், எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்பட்டது என்ற தகவல் இடம் பெற்றிருக்கும். அதன் அடிப்படையில்தான் வருமான வரிகணக்கை தாக்கல் செய்வார்கள். இப்போது, திடீரென டீடிஎஸ் வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து எஸ்.எம்.எஸ்கள் திடீரென கடந்த வாரம் வந்துள்ளன. இந்த எஸ்எம்எஸ்கள் பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளன. பிடித்தம் செய்யப்பட்ட டீடிஎஸ் தொகை விவரத்துடன் வருமான வரித்துறை எஸ்.எம்.எஸ்களை அனுப்பியுள்ளது. ஆனால், அதை பார்த்ததும் ஐயோ இவ்வளவு வரி செலுத்த வேண்டுமா? என்ற பீதியில் பலர் உள்ளனர். 
    இந்த எஸ்எம்எஸ் பூதம் குறித்த தகவல்கள் வருமாறு
    * கடந்த காலாண்டில் பிடித்தம் செய்யப்பட்டு வருமான வரித்துறையில் செலுத்தப்பட்ட டீடிஎஸ் எவ்வளவு என்பதை 3 மாதத்துக்கு ஒரு முறை இப்படி ஒரு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வருமான வரித்துறை திட்டமிட்டுள்து. முதல் கட்டமாக 2.5 கோடி மாத சம்பளக்காரர்களுக்கு இந்த எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது. மாத சம்பளக்காரர்கள் அல்லாத 4.4 கோடி பேருக்கு டீடிஎஸ் பிடித்தம் தொடர்பான விவரங்கள் எஸ்எம்எஸ்கள் மூலம் மாதம் ஒரு முறை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
    * இந்த வசதியை பெற வருமான வரித்துறையின் இபைலிங் இணையச் சேவையில் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
    * இந்த எஸ்எம்எஸ் சேவையின் மூலம் எவ்வளவு வரி பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரத்தை ஒவ்வொரு ஊழியரும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு வேளை நிறுவனம் தவறான பான் எண்ணில் வரியை செலுத்திவிட்டாலும் கண்டுபிடித்து அதை சரி செய்துவிடலாம் என்று வரித்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல், பிடித்தம் செய்யப்பட்ட வரியை நிறுவனம் தவறுதலாக செலுத்தாமல் விட்டுவிட்டாலும் அதை தெரிந்து கொள்ளலாம்.
    இந்த விவரங்களை தெரிந்து கொள்வதன் மூலம் வருமான கணக்கை தாக்கல் செய்வதில் ஏற்படும் தவறுகளை குறைத்துவிடலாம் என்றும், இந்த எஸ்எம்எஸ்களை பார்த்து அதிர்ச்சியடைய வேண்டாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad