ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு முக்கியம்: பிரதமர் நரேந்திர மோடி.
புது தில்லி: ஊடகங்களின் செயல்பாட்டில் அரசின் குறுக்கீடு இருக்கக் கூடாது; அதேவேளையில், ஊடகங்களுக்கும் சுய கட்டுப்பாடு முக்கியம்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
தில்லியில் இன்று நடைபெற்ற இந்திய பத்திரிகை கவுன்சிலின் (பிசிஐ) பொன் விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -
பிகாரில் இரு பத்திரிகையாளர்கள் அண்மையில் கொலை செய்யப்பட்டது குறித்து மிகுந்த வேதனையும் தெரிவித்த அவர் "கட்டுப்பாடு இல்லாமல் எழுதுவது, பெரிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதேவேளையில், ஊடகங்களை வெளியே இருந்து கட்டுப்படுத்துவதும் பாதிப்பையே ஏற்படுத்தும். எனவே, ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு மிக அவசியம்' என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறார்.
ஊடகங்களின் செயல்பாட்டில் அரசின் குறுக்கீடு இருக்கக் கூடாது. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்றபடி சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது, ஊடகத் துறையினரின் பொறுப்பாகும்.
அப்போது தான் நல்ல மாற்றங்கள் நிகழுமேயன்றி, வெளியே இருந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் எந்த மாற்றங்களும் வராது.
கடந்த 1999-ஆம் ஆண்டு கந்தகார் விமானக் கடத்தல் சம்பவத்தின் போது, விமானப் பயணிகளின் குடும்பத்தினரின் கோபத்தையும், கண்ணீரையும் செய்தி தொலைக்காட்சிகள் உடனுக்குடன் ஒளிபரப்பின. இக்காட்சிகள், இந்தியாவிடம் எதை கேட்டாலும் பெற்றுவிடலாம் என்ற ஊக்கத்தை பயங்கரவாதிகளுக்கு அளித்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும் என்ற வாதம் எழுந்தது. அதன்பிறகு, இதுபோன்ற செய்திகளை வெளியிடும் போது, ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டன என்றார் பிரதமர் மோடி.







கருத்துகள் இல்லை