பண பரிவர்த்தனை: நள்ளிரவில் மூத்த அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை.
புதுதில்லி: வங்கிகளில் நடைபெறும் ரூபாய் நோட்டு விநியோகம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நள்ளிரவில் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் ரூபாய் நோட்டு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
இந்நிலையில், பாஜக மூத்த அமைச்சர்களான உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரி வெங்கையா நாயுடு, மின்சாரம் மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியூஸ் கோயல் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று (நவ 13) நள்ளிரவு வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதையடுத்து நாடு முழுவதும் வங்கிகளில் நடைபெறும் பண பரிவர்த்தனை மற்றும் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்து கேட்டறிந்ததாகவும், வங்கி தாளாளர்கள் குறைந்த பட்சம் ரூ.50 ஆயிரத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வங்கி தாளாளர்கள் ஒரே நாளில் பலமுறை பணம் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் கூறுகையில், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் நடைபெற்று வரும் பண விநியோகம் மற்றும் தேவை குறித்து பிரதமர் ஆய்வு நடத்தினார். மேலும், பண பரிவர்த்தனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதாக கூறினார்.







கருத்துகள் இல்லை