மாலை செய்திகள்
17/11/16

ரூ.500, ரூ.1,000 நோட்டுக்கள் செல்லாது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் இன்று மாநிலங்களவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. எதிர்க் கட்சிகள் எழுப்பிய இந்த அமளியால் அவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.
வங்கிகளில் பழைய நோட்டுக்களை மாற்றுவது ரூ.4,500 லிருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
நாசிக்கில் உள்ள ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அச்சுக்கூடத்தில், இரண்டு நாட்களில் ரூ.786 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருமண வீட்டார் தங்கள் செலவுகளுக்காக வங்கியிலிருந்து ரூ.2.5 லட்சம் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வாரத்திற்கு ரூ.10,000 வரை எடுக்கலாம். வர்த்தகர்கள் வாரத்திற்கு ரூ.50,000 வரை பணம் எடுக்க முடியும் -பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் சக்தி காந்த தாஸ்.
கடந்த 14, 15, 16 தேதிகளில் 11 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஒரு பேட்டியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீஃப் இதை அறிவித்திருந்தார். ஆனால் இத்தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது!
இந்தியாவில் 2 கோடி வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக ராஜ்யசபாவில் நேற்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 56வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல். இதையடுத்து, நாளை மறுநாள் தனி வார்டுக்கு ஜெயலலிதா மாற்றப்பட உள்ளார். பின் சுமார் ஒரு வாரத்திற்குப் பின் அவர் வீடு திரும்புவார் எனத் தெரிகிறது.
ஜெயலலிதா பரிசுப்பொருட்கள் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா தரப்பு கோரிக்கையை அடுத்து ஜனவரி 3-வது வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட முத்து வெங்கடேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்திற்கு புதிய ₹500 ரூபாய் நோட்டு வரவில்லை: இந்தியன் வங்கி தகவல.
புதுவை, நெல்லித்தோப்பு தொகுதியில் இன்று மாலை 5 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்.
மணலியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதல்: தீப்பிடித்து விபத்து.
வங்கிகளில் இடது விரலில் மை வைத்தால் ஓட்டு போட முடியாது: தேர்தல் ஆணையம்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நாளை மறுநாள் இடைத்தேர்தல். இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து அத்தொகுதிகளில் உச்சக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன அரசியல் கட்சிகள்.
தமிழகத்தில் 8 மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதிகள் 2 வாரத்தில் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 3,000 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கோடியக்கரை அருகே நாகப்பட்டினம்-காரைக்கால் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் படுகாயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்!
ஜல்லிக்கட்டு நடத்த பாராளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டம் கொண்டு வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்.
ஜல்லிக்கட்டு தொடர்பான சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது கவலையை அளிக்கிறது. ஆனாலும் வரும் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிச்சயம் நடைபெறும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது -தமிழிசை.
சென்னை கிண்டி அருகே மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தார் பார்த்தசாரதி என்ற நபர். தலையை மட்டும் வெளியே நீட்டி அவர் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது ஒரு மின் கம்பத்தில் அவருடைய தலை பயங்கரமாக மோதியது. படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பார்த்தசாரதி, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அசாம் மாநிலத்தில் புதிய ரூபாய் நோட்டுகளை கொண்டு சென்ற வாகனம் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒட்டுநர் உயிரிழந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஆரூரில் நேற்று இரவு 11 மணிக்கு 9 பேருடன் சென்ற வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஏரியில் வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் மாயமாகியுள்ளனர்.
உத்திரபிரதேசம் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. ராம்கோபால் யாதவ் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்விட்சர்லாந்திலிருந்து 9 ஈழத் தமிழர்கள் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக அவர்கள் அந்த நாட்டில் தங்கியிருந்ததாகக் குற்றச்சாட்டு. 9 பேரும் நேற்று இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
ஆல்ப பாடல்கள் மூலம் பிரபலம் ஆனவர் ஈழத்துத் தமிழ் பெண் அர்ச்சனா செல்லத்துரை. டென்மார்க்கில் அவர் பைலட் பயிற்சியை முடித்து விமானியாகியுள்ளார். டென்மார்க்கில் விமானி ஆன முதல் ஈழத்துத் தமிழ்ப் பெண் இவரே.
ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை செல்லாதது என கடந்த வாரம் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. கருப்புப் பண ஒழிப்பிற்கான மோடியின் இந்த நடவடிக்கையை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார். டெல்லி வந்துள்ள அவர், பெரிய பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கும் அரசை இந்தியா பெற்றுள்ளதாகக் கூறினார்.
புகைப்படங்களை ஸ்கேன் செய்யும் புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது கூகுள். 'போட்டோஸ்கேன்' எனற இந்த ஆப், ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்ட் போன்களுக்கானது. தரமான புகைப்படங்களை அளிப்பதற்காக இலவசமாக இந்த ஆப்பை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த ராம் எஸ்.கிருஷ்ணன் முதலிடம் பிடித்தார்.
கருத்துகள் இல்லை